×

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தனர். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருக்கின்றனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? என்றும் வினவிய முதலமைச்சர், பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். பாஜகவின் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது; இந்த வழக்கை சட்டரீதியாக திமுக எதிர்கொள்ளும். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை முதல்வர் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

செந்தில் பாலாஜியை சந்தித்த 15 அமைச்சர்கள்:

ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்க இதுவரை 15 அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர். செந்தில் பாலாஜியை சந்திக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்துள்ளனர். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வருகை தந்துள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யானாதன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசனும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர்.

செந்தில் பாலாஜிக்கான சிகிச்சை என்ன?

சட்டத்திற்கு புறம்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது செந்தில் பாலாஜி இதய துடிப்பில் மாற்றம் இருந்தது.
ஈசிஜியில் சில மாறுதல்கள் இருந்ததால் மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை:

ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடப்பதால் செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Senthil Balaji ,Government Hospital of Omantur ,G.K. Stalin ,Chennai ,Omantur Government Hospital ,MC G.K. Stalin ,Omanthurar Hospital ,Minister ,B.C. ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...